Sunday, December 19, 2004

வெங்கடெஷ் - தன்னம்பிக்கை, உழைப்பு, தியாகம் - இறுதி வரை!

இது வெங்கடெஷ் என்ற அசாதாரண வாலிபரைப் பற்றிய ஒரு மிகச் சிறிய கதை! ஏனெனில், ஒரு கால் நூற்றாண்டே அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! அதற்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது தான் அதன் அற்புதமே! அவரைச் சீரழித்த ஒரு கொடிய நோயை எதிர்த்து போராடியபடி, பல வருடங்கள் தேசிய அளவில் செஸ் விளையாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கடெஷ் தனது பத்தாவது வயதில், Duchenne Muscular Dystrophy-யால் (தசைகளை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்யும் ஒரு கொடிய நோய்) பாதிக்கப்பட்டார். அந்த நோய்க்கு இன்று வரை குணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்நோய், பாதிக்கப்பட்டவரின் உடலில் பரவி மூளையை இறுதியாகத் தாக்கும்போது, மரணம் சம்பவிக்கிறது.

வெங்கடெஷ் தனது தன்னம்பிக்கையாலும் அயராத உழைப்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வணிகவியல் பட்டதாரி ஆனதோடு, தேசிய அளவில் செஸ் விளையாடியும், பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்தும் வந்தார். ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இத்தனையும், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே! நோய் முற்றிய நிலையில், அவரது கழுத்துக்குக் கீழ் முழுதும் செயலிழந்து விட்டது. மருத்தவமனையில் இருந்த அவர், தனது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் ஒரு மகத்தான தியாகம் செய்ய முன் வந்தார்.


நோய் அவரது மூளையைத் தாக்குவதற்கு முன்னமே, அவரது உள்உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், அவற்றை மனமுவந்து தானம் செய்ய விழைந்தார். ஒரு வகையில், தன்னை கருணைக் கொலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்!! தனது சாவின் மூலம் பலருக்கு வாழ்வு தர எண்ணிய அந்த தியாக உள்ளத்தின் இறுதி விருப்பம் சட்டத்தின் ஒப்புதல் இல்லாததால், நிறைவேறாமல் போனது! இதற்காக, அவரது தாயார் வெங்கடெஷின் மனுவை உயர்/உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று!

குணம் கண்டுபிடிக்கப்படாத ஒரு பெருநோயால், மிகுந்த வலியுடன் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அல்லது மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் உயிர் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மனமுவந்து, சுயவிருப்பத்தின் பேரில், அவரது உள்உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால், அதை செயல்படுத்த நமது நாட்டின் சட்டங்கள் இடம் தருவதில்லை. நமது நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை வேண்டி பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், உறுப்பு தானம் குறித்த சட்டம் திருத்தப்பட வேண்டுமா / கருணைக்கொலை அனுமதிக்கப்படலாமா என்ற கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகின்றன.

1 மறுமொழிகள்:

ROSAVASANTH said...

மிகவும் நெஞ்சை தொட்டுவிட்டது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails